அம்மா |

"தாயே, என்னைக் கருவில் ஏற்றபோது நீ உடம்பு வேதனைப்பட்டிருப்பாயே,

நான் கருவில் உருவாகி வளர்ந்தபோது நீ வாயில் எடுத்து உணவு செரிக்காமல் அவஸ்தைப்பட்டிருப்பாயே,

தாயே என்னை வளர்ப்பதற்காக நீ விரும்பிய விரும்பாத எல்லா உணவையும் என் பொருட்டு எடுத்துக் கொண்டாயே,

தாயே நான் வளர்ந்து வரும் நேரத்தில் உன்னால் சுமக்க முடியாமல் பெருமூச்சு விட்டு, இங்கும் அங்கும் அலைந்தாயே,

நீ போகவேண்டிய இடங்களுக்குப் போகாமல், அப்படிப் போனால் எனக்குக் கடினம் என்று சொல்லி வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டு, என் மீதே கவனமாக இருந்தாயே,

நான் வெளியே உருவெடுத்து வந்தபோது உன்னுடைய உதிரம் பெருக்கெடுத்து ஓடியிருக்குமே, வலியில் அலறி இருப்பாயே

நான் வாயால் கடித்து உறிஞ்சும் போது உன் மார்புக் காம்புகள் வலித்திருக்குமே.

என் அழுகுரல் கேட்டதும் ஓடோடி வந்து தூக்கினாயே

நான் பிறந்த பிறகு எனக்கு பால் கொடுக்க வேண்டுமென்பதற்காக வேண்டாததை விலக்கி, வேண்டியதை மட்டும் உண்டாயே,

நான் உன் மடியில் மல, மூத்திரம் செய்தேனே அந்த துர்வாசனை வேதனைகளைப் பொறுத்துக் கொண்டாயே, நான் இரவிலே அழுது மற்றவர்கள் ஏச நீ எழுந்து என்னைச் சமாதானப்படுத்தி, மற்றவர்கள் ஏச்சைப் பொறுத்துக் கொண்டாயே

அம்மா என்பது உடம்பல்ல, அம்மா என்பது சுலோசனா அல்ல. அம்மா என்பது மோனஹன் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தமிழ்ப் பண்டிதை மட்டுமல்ல. அம்மா என்பது இந்த உலகத்தை அரவணைத்துக் கொண்டிருக்கிற ஒரு உணர்ச்சி.

அம்மா என்பது உலகத்திலுள்ள எல்லாப் பெண்களிடமும் இருக்கிற ஒரு சக்தி.
அம்மா என்பது மழை பொழிய காத்திருக்கும் குளிர் மேகம்.

அம்மா என்பது உலகைக் குளிர்வித்துக் கொண்டிருக்கிற தாவர சக்தி.

அம்மா என்பது உலகிலுள்ள அத்தனை உயிர்களையும் தாங்கிக் கொண்டிருக்கின்ற பூமியின் பலம்.

No comments:

Post a Comment