படித்ததில் பிடித்தது

 நெருங்கிய நண்பரொருவர் இன்றைக்குப் பத்து ஆண்டுப் பணிவாழ்க்கையை நிறைவு செய்கிறார். பத்து ஆண்டுகளாக ஒரே நிறுவனம்தான், கல்லூரியிலிருந்து நேராக இங்கு நுழைந்தவர், படிப்படியாக முன்னேறி ஒரு பெரிய பொறுப்பில் தொடர்கிறார்.

காலையில் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அவரைத் தொலைபேசியில் அழைத்து மனமாரப் பாராட்டினேன். பிறகு, ‘இந்தப் பத்து வருஷத்துல நீங்க கத்துக்கிட்ட, உங்களுக்குக் கிடைச்ச மிக முக்கியமான அறிவுரை என்ன, அதைச் சொல்லுங்களேன்’ என்றேன்.

அவர் கொஞ்சமும் யோசிக்கவில்லை, ‘சின்ன விஷயங்களை அலட்சியப்படுத்தக்கூடாதுங்கறதைத்தான் கத்துக்கிட்டேன். இப்பவும் அதுதான் ரொம்ப நல்லாப் பயன்படுது’ என்றார்.

‘ஆனா, இப்ப நீங்க செய்யற எதுவுமே சின்ன விஷயம் இல்லையே. சொல்லப்போனா, முன்பைவிடப் பெரிய, மிகப் பெரிய வேலைகளைத்தானே ஏத்துக்கறீங்க?’

‘உண்மைதான். ஆனா, இது எல்லாமே சின்ன விஷயத்தை அலட்சியப்படுத்தாம இருந்ததால கிடைச்ச திறமைதான்’ என்றார் அவர். தன்னுடைய பணிவாழ்க்கையிலிருந்தே ஓர் எடுத்துக்காட்டைப் பயன்படுத்தி அதை அழகாக விளக்கினார்.

‘நான் வேலைக்குச் சேர்ந்த புதுசுல, பெரிய அனுபவம் கிடையாது. அதனால, முக்கியமான வேலைகளை என்கிட்ட ஒப்படைக்கத் தயங்குவாங்க, நம்பமாட்டாங்க. Bug Fixingந்னு சொல்லப்படற பிழை திருத்தற வேலைதான் கிடைக்கும். எவனோ எழுதின ப்ரொக்ராம்ல எங்கே பிரச்சனை இருக்குன்னு தேடிப் பிடிச்சுச் சரிசெய்யணும். அதுல என்ன பெரிய மன நிறைவு கிடைச்சுடப்போகுது, சொல்லுங்க! சீனியர்ங்களைமாதிரி முக்கியமான, பெரிய சாஃப்ட்வேர்களை எழுதமாட்டோமா, யாராலும் தீர்க்கமுடியாத சிக்கலான ஒரு பிரச்சனையை இவன் தீர்த்துட்டான்னு கைதட்டல் வாங்கமாட்டோமான்னு ஏக்கமா இருக்கும்.’

‘என்னோட நல்ல நேரம், அப்ப எனக்கு மேனேஜரா இருந்தவர் என்னோட இந்த மனநிலையை நல்லாப் புரிஞ்சுகிட்டார். ஆனா அதுக்காக, உடனே என் கையில ஒரு பெரிய வேலையைத் தூக்கிக் கொடுத்துடலை. அதுக்குப் பதிலா, சின்ன வேலையையும் இவன் ஒழுங்கா, திருத்தமா, அழகா முடிக்கறான்னு பேர் வாங்கு, அந்தப் பேர்தான் உனக்குப் பெரிய வேலைகளைக் கொண்டுவரும்ன்னு சொன்னார்.’

‘அப்போ எனக்கு இருந்த முதிர்ச்சிக்கு, அவர் சும்மாப் பேச்சுல ஏமாத்தறார்ன்னுதான் தோணிச்சு. ஆனாலும் முயற்சி செஞ்சேன். எனக்குக் கிடைச்ச சின்ன வேலைங்களைச் சின்னதுன்னு நினைக்காம முழு உழைப்பைக் கொடுத்தேன். நான் ஒரு விஷயத்துல கை வெச்சா மறுபடி இன்னொருத்தர் அங்கே கை வைக்கவேண்டிய அவசியமே இருக்காதுங்கறமாதிரி வேலை பார்த்தேன். அதுல கிடைச்ச நல்ல பேர்தான் மத்த ஜூனியர்ஸையெல்லாம் தாண்டி எனக்குப் பெரிய வேலைகளைக் கொண்டுவந்து கொடுத்தது. அதைவிட முக்கியமா, அந்தப் பெரிய வேலைகளையும் சரியா முடிக்கிற ஒழுங்கைக் கத்துக்கொடுத்தது. அந்த மனநிலை வந்துட்டா இன்னும் இன்னும் பெரிய வேலைகள் வரும்போது பதற்றமே இருக்காது, சிறிசோ, பெரிசோ, நம்ம கைக்கு வந்தது நம்ம பொறுப்புங்கற உணர்வு இருக்கும். திறமை, உழைப்பு, இதையெல்லாம் தாண்டி, ஒரு விஷயத்தைத் தொடக்கத்திலேர்ந்து நிறைவுவரைக்கும் இவன் பொறுப்பெடுத்துச் செய்வான்ங்கற நல்ல பேரு ஒரு பெரிய சொத்தாத் தோணுது.’

என்னுடைய நண்பருக்குத் தமிழ் தெரியாது. ஆனால், அவர் இதை விளக்கியபோது, ‘இதனை இவன் செய்யும்’ என்று எழுதாமல், ‘இதனை இவன் முடிக்கும்’ என்று திருவள்ளுவர் எழுதியிருப்பதைத்தான் நினைத்துக்கொண்டேன்!

ம்ஹூம், முந்தைய பேராவை மறந்துவிடுங்கள், அது சும்மா உங்களிடம் நல்ல பேர் வாங்குவதற்காக எழுதியது. உண்மையில் எனக்கு அப்போது வாலி எழுதிய இந்த வரிகள்தான் நினைவுக்கு வந்தன: ‘ராஜா கைய வெச்சா, அது ராங்காப் போனதில்ல, பெரிசு என்றாலும் சிறிசு என்றாலும் சொகுசு என் வேலதான்.’

Source: facebook.com